1. Home
  2. தமிழ்நாடு

எனக்கு இது தான் மகிழ்ச்சி! இளைஞர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிய மு.க.ஸ்டாலின்!

எனக்கு இது தான் மகிழ்ச்சி! இளைஞர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிய மு.க.ஸ்டாலின்!


"நான். மிக நல்ல நிலைமையில் இருக்கிறேன்” என்று இளைஞர்கள் என்னைச் சந்தித்துச் சொன்னால் அதை விட மகிழ்ச்சிக்குரிய செய்தி வேறு இருக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ‘வெங்கடேஷ்குமார் மெமோரியல் டிரஸ்ட்’ சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை இன்று காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, வெங்கடேஷ்குமார் மெமோரியல் டிரஸ்ட்’ சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் காலத்தின் தேவையாக இருக்கின்றன.

ஏனென்றால், இன்றைய தினம், வேலை இருக்கிறது, வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாக ஆகிவிட்ட காலம். இந்தக் காலத்தில் வேலை வாய்ப்பு முகாமில் நீங்கள் பங்கெடுக்க வந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. பல்வேறு கனவுகளோடு இளைஞர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்களது படிப்பு, உங்களது விருப்பம், உங்களது கனவுகளுக்கு ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து வேலைகளைத் தேர்வு செய்யுங்கள்.

3000 வேலைவாய்ப்புகள் என்று அறிவித்துள்ளார்கள். இது உங்களது வாழ்க்கையின் மிக நல்ல தொடக்கம். முன்னேற்றத்துக்கு முதல் படி. இதில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருப்பீர்கள். உங்களது ஊதியத்தை நம்பி உங்கள் குடும்பம் காத்திருக்கலாம். ஏராளமான கடமைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் என்பது அமைந்துள்ளது.

இன்னும் சில மாதங்கள் கழித்து, அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ எங்காவது ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, “நீங்கள் தென்காசி வேலைவாய்ப்பு முகாமைத் தொடக்கி வைத்தீர்கள் அல்லவா, அதில் வேலை பெற்றவன்; நான். மிக நல்ல நிலைமையில் இருக்கிறேன்” என்று நீங்கள் என்னைச் சந்தித்துச் சொன்னால் அதை விட மகிழ்ச்சிக்குரிய செய்தி வேறு இருக்க முடியாது என உரையாற்றினார்.

Trending News

Latest News

You May Like