ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது..?
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பிரச்னையைத் தீர்க்க முடியும்.
* இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது.
* ஆஸ்துமா உள்ளவர்களின் மெனு கார்டில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டியவை... சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்..!
* காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது. வெளுத்த பாலைவிட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்!
* மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம்.
* இரவு நேரத்தில் மூச்சிரைப்பால் (Wheezing) சிரமப்படுகிறீர்களா? கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும். இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும். இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்துவந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
* இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது. இடையிடையே பால் கலக்காத தேநீர் அருந்தலாம்.
* சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே நேரம், தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம், `அய்யோ... எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் சேராது’ என ஒதுக்கத் தொடங்கினால், இழப்பு கூடும்; இழுப்பும் கூடும்.
* மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை ஏழரை மணிக்கு முன்னதாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது. இரவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி... கூடவே கூடாது! காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
* தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.