என்ன சொல்றீங்க..! ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தது நாங்களா ? கொந்தளித்த வானதி சீனிவாசன்..!
மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ரயில்வே பட்ஜெட்டையே ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சாரும் என்றும், மூத்தோர்களுக்கான பயணச் சலுகை, கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது எனவும் விமர்சித்தார். தமிழ் மொழி தெரியாதவர்களே இன்றைக்கு ரயில்வேயில் இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தை வஞ்சிக்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் பல்வேறு கருத்துக்களை மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீது உரையாற்றிய போது பேசி இருந்தார்
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “உணர்ச்சி பொங்க பேசி, தனது கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறார் சு.வெங்கடேசன்” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சு.வெங்கடேசன், ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா? ஆண்டுதோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா? என்றெல்லாம் வானதி சீனிவாசனுக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை என்றும் ஆவணங்களை வெளியிடாமலே ரயில்வே துறை விவாதங்களை நடத்தி முடித்துவிட்டது மோடி அரசு என்றும் குறிப்பிட்டு இதெல்லாம் உண்மையா, இல்லையா என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “உண்மைக்கு புறம்பான கருத்துக்களைக் கூறி, தமிழக மக்களைக் குழப்ப முயற்சிக்கும் சு.வெங்கடேசனின் செயலுக்கு பொய் என்ற சொல்தான் மிகப்பொருத்தமானது. 2017 -ல் யூனியன் பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை, இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு ஒழித்துவிட்டது என்று கூறும் உங்கள் வார்த்தைகளுக்கு பொய் என்ற சொல்லைத் தவிர பொருத்தமான சொல் வேறு என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வார்த்தைக்கு வார்த்தை “பிங்க் புத்தகம்” எங்கே என்று கேட்கும் உங்களுக்கு, 2024-25 ஆம் ஆண்டிற்கான பிங்க் புத்தகம், இடைக்கால பட்ஜெட்டுக்குப் பின் பிப்ரவரி 2, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியாமல் போனது சற்று ஆச்சரியம்தான் என்று கூறிய வானதி சீனிவாசன், “ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்பதால் இடைக்கால பட்ஜெட் சமயத்தில் வெளியிடப்பட்ட “பிங்க்” புத்தகமே, மத்திய முழு பட்ஜெட்டிற்கும் பொருந்தும் என்ற குறைந்தபட்ச தெளிவு கூட அவருக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
2024-25 நிதியாண்டில் ரயில்வே துறைக்காக ரூ.2.55 லட்சம் கோடி நிதியும், அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.6,362 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அவையனைத்தும் வெறும் வெற்று அறிக்கை என்ற உங்களின் ஆதாரமற்ற கூற்று, தமிழக மக்களைக் குழப்பும் செய்கையே தவிர வேறில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்வே திட்டங்களில் சிலவற்றையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களின் பட்டியல்கள் அதிகரித்துக்கொண்டுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என சு.வெங்கடேசன் கூறுவது, முற்றிலுமான கட்டுக்கதை” என காட்டமாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.