சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? எந்த ராசிக்கு எந்த சனி..!

பொதுவாக ஏழரை சனி அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமத்து சனி, கண்ட வரும்போது உங்களுக்கு சனி திசையோ, ராகு, கேது திசையோ, செவ்வாய் திசையோ, 6,8,12 ஆம் இடம் அதிபதி திசையோ அல்லது மாறாக பாதக திசையோ சுய ஜாதகத்தில் நடந்தால் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே ஒருவரின் கர்ம வினையை சுட்டிக்காட்டும் என்பதால் சனியின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக சுய ஜாதகத்தில் உங்கள் ராசிக்கு சனி 1, 2, 4, 7, 8, 12 ஆம் இடங்களுக்கு கோட்சாரப்படி வரும் போது சனியின் பார்வை விழும் ராசிகளும் கூட பலவிதமான பிரச்சனைகள், விரயங்களை சந்திக்க வேண்டி வரலாம். அதே சமயம் யோக திசை நடப்பவர்களுக்கு ஏழரை சனியே நடந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் வராது.
மேலும் சனியின் நிலையும் கூட வாழ்வில் திடீர் திருப்பத்திற்கு காரணமாகிறது. அதன்படி தற்பொழுது அஸ்தங்க நிலையில் இருக்கும் சனி பகவான் மார்ச் 31, 2025 அன்று அஸ்தங்க நிலையில் இருந்து உதய நிலைக்கு வருகிறார். அப்பொழுது சனி பகவான் அதீத பலத்தோடு ஆதிக்கம் செலுத்துவார்.
ஆனால் வரும் ஜூலை 13, 2025 அன்று காலை 7:24 மணிக்கு சனி வக்கிரமடைவதால் சில ராசிகளுக்கு திடீர் யோகமும் எதிர்பாராத இடமாற்றமும் விரையச் செலவுகளும் உண்டாகலாம். சனி பகவான் நவம்பர் 28, 2025 அன்று காலை 7:26 மணிக்கு வக்கிர நிவர்த்தியாகிறார். ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் திருமணம், கிரகப் பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்களை சனி வக்ர நிவர்த்தியான பின் செய்வது நல்லது.
ராகுவுடன் சனி பகவான் இணையும் போது என்ன நடக்கும்?
மீன ராசியில் ராகுவுடன் சனி பகவான் இணையும் போது மிகப்பெரிய பிரச்சனைகள் உலக அளவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் சந்திர கிரகணம் முடிந்ததும் இயற்கை சீற்றம் மற்றும் பல எதிர்பாராத சம்பவங்கள் அரசியல் ரீதியாகவும் நடக்கும் என பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் நம் நாட்டிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரியும் என்பதால், இந்த நாடுகளில் நிச்சயம் பிரச்சனைகள் வரலாம் எனக் கணிப்பு.
ஏழரை சனி ராசிகள் எவை?
- கும்பம்,
- மீனம்,
- மேஷம்.
சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? எந்த ராசிக்கு எந்த சனி பிடித்திருக்கிறது?
மேஷம் - விரயச் சனி
மீனம் - ஜென்ம சனி,
கும்பம் - பாத சனி
சிம்மம் - அஷ்டம சனி
கன்னி - கண்ட சனி
தனுசு - அர்த்தாஷ்டம சனி