செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல என்னென்ன நிபந்தனைகள்?
இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சகோதரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அமெரிக்கா செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அமெரிக்கா சென்று வரை 15 நாட்கள் அனுமதி தந்தால் போதும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயார் என்றும் அசோக்குமார் தரப்பு கூறியது. ஆனால், அசோக் குமார் அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியபோதும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அத்துடன், விசாரணை பாதிக்கும் என்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை வாதிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அசோக் குமார் தரப்பில், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்திய மருத்துவர் அளித்த பரிந்துரை கடிதம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில், அமெரிக்கா போவதற்கு முன்பு தன்னுடைய மனைவி, மகளின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைப்பதாக அசோக் குமார் தெரிவித்தார். தற்போது மனைவியின் பாஸ்போர்ட்டை வழங்க முடியாது என்று கூறுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அசோக் குமார் தரப்பில், “மருத்துவ சிகிச்சைக்காக அசோக் குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அவருடைய மகள் மட்டும் இங்கு இருக்கிறார். அதனால் அவரது மகள் பாஸ்போர்ட்டை சமர்பிக்க தயாராக இருக்கிறோம். அசோக்குமார் செப்டம்பர் 4ஆம் தேதி அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளது. அசோக் குமார் எங்கேயும் தலைமறைவாக மாட்டார். அப்படி தலைமறைவானது உண்டாக்கும் பின் விளைவுகள் அவருக்கு தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அசோக் குமாருக்கு என்ன மாதிரியான நிபந்தனைகள் விதிக்கலாம் என்று அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைக்கு அதாவது இன்று தள்ளிவைத்துள்ளனர்.