1. Home
  2. தமிழ்நாடு

வேகமாக பரவும் ‛வெஸ்ட் நைல்’ வைரஸ்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

1

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் புதிய வைரஸ் காய்ச்சல்கள் பெரும்பாலும் கேரளாவிலிருந்து தான் உருவாகின்றன. அல்லது, அங்குதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அங்கு வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த காய்ச்சலின் பூர்வீகம் ஆப்பிரிக்கா நாடுகள்தான். 1937ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது. அசுத்தமான நீரில் வளரும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்த அளவில் கடந்த 2011ம் ஆண்டு இந்த வைரஸ் பாதிப்பு கேரளாவில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. 2019ல் கேரள சிறுவன் ஒருவர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் இது குறித்த அச்சத்தை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த காய்ச்சலுக்கு பலியானார். இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது. ஆனால், வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களை கடித்த கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் வைரஸ் பரவலாம். ரத்த மாற்றம் செய்யப்படும்போது, அதில் வைரஸ் இருந்தால், மற்றவர்களுக்கு பரவலாம். இது தவிர, கருவுற்றிருக்கும் தாய்மார்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும்.

முதலில் இந்த வைரஸ் பறவைகளைதான் பாதித்திருந்தது. பின்னர் வைரஸ் திரிபு நிலையை அடைந்து மனிதர்களிடம் பரவி வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதித்த பறவையை சாப்பிடுவதன் மூலம் வைரஸ் பரவாது. ஆனால், இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிடவில்லை எனில் பரவ வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வைரஸ் பாதிப்பில் முக்கியமான விஷயம் என்னவெனில், இது பாதித்தவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தெரியாது என்பதுதான். காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடுமையான நோய்தொற்றுக்கு ஆளாகும்போது மூளை அழற்சி, மூளைக்காய்ச்சல், பக்கவாதம் மட்டுமின்றி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. வைரஸ் பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவர் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபராக இருப்பார். இவருக்கு நரம்பு மண்டலத்தில் நிரந்தரமான பாதிப்பு ஏற்படக்கூடும். கொசுக்கள் மூலமாக தான் இந்த நோய் பரவும் என்பதால் வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது, வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது. வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விறைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படும் மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like