நாங்க அவங்க மாதிரி இல்ல... கோவாக்ஸின் ரொம்ப பாதுகாப்பானது... விளக்கம் கொடுத்த பாரத் பயோ டெக்!
கொரோனா பெரும் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளுக்கு இடையே எந்த ஒரு போக்குவரத்து தொடர்பும் இல்லாமல் இருந்தது. இந்தியாவிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்தது.
அதன் பின் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர்.கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை மக்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தன. இந்த கோவிஷீல்டு தடுப்பு ஊசியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மத்திய அரசின் அனுமதி உடன் தயாரித்தது.
கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளும் உலக அளவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கொரோனா தொற்று கொரோனா பெருந் தொற்று கட்டுக்குள் வந்தது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படுவதாகவும் உடல் நல பாதிப்பு மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதாகும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதை அடுத்து இந்த மருந்து கண்டுபிடித்த நிறுவனத்துக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆல்டிராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. அதில் கோவிஷீல்டு தடுப்பூசி சில நேரங்களில் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் ரத்தத்தில் உறைதல், டிடிஎஸ் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு ஏற்படாலாம் என்றும் ஆனால் இது மிக அரிதாக நடக்கும் ஒன்று என்றும் தெரிவித்தது.இந்த அறிக்கை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மக்களின் பாதுகாப்பு தான் முக்கியத்துவம் என்பதை மனதில் வைத்து இந்த கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் இந்த தடுப்பூசி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.