வானிலை அப்டேட் : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…!
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவியது. இந்நிலையில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழக்கக்கூடும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும், டிசம்பர் 15ஆம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.