மணிப்பூர் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம் : பிரதமர் மோடி..!

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகையில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையிலும் முன்னிலையில் உள்ளது. 140 கோடி இந்திய சொந்தங்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றனர். சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் பலரும் உயிரிழந்துள்ளனர். நம்முடைய தாய் மற்றும் சகோதரிகள் அவமரியாதையாக நடத்தப்பட்டுள்ளனர். அங்கு அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் மக்களுக்காக இந்தியா துணை நிற்கும். அங்கு அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த முறை இயற்கை பேரிடர்கள் கற்பனை செய்ய முடியாத அளவில் நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் இன்று மக்கள் தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை உள்ளது. இந்த மூன்றும் தேசத்தின் கனவுகளை நனவாக்கும். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் பஞ்சமில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. உலக அரங்கில் தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.