1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் பாடகி இசைவாணிக்கு துணை நிற்போம்: நீலம் பண்பாட்டு மையம்!

1

நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் கானா பாடகி இசைவாணி, ‘ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா’ என்று ஐயப்பனை பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதில், கடவுள் ஐயப்பன் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் பாடியதாக கானா இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்வது குறித்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால், அந்த நேரத்தில் பெரும் விவாதமே நடந்தது. அதன் பின், நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. அந்த நேரத்தில் தான் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்கிற இசை குழு உருவானது. அப்போது தான், “ஐ எம் சாரி ஐயப்பா” என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு கோயில் பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக இப்பாடல் உள்ளது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த பாடலை, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடி உள்ளார். பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் பாடல், பெண்கள் கோயில் நுழையும் உரிமை கோரும் பாடலாகும். அந்த உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் சில விஷமிகள் பொய்யான செய்தியைப் பரப்பி, வலைதளத்தில் சமூகப் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக பாடகர் இசைவாணியை ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவர் குறித்து அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். எங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகி இசைவானிக்கு துணை நிற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நீலம் பண்பாட்டு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் ஐயப்ப சுவாமிக்கு குறித்து அவதூறு பாடல் பாடியதாக சென்னை கானா பாடகி இசைவாணி மீது மதுரை காவல் துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

பாஜக மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் உள்ளிட்ட அக்கட்சியினர் கானா பாடகி இசைவாணிக்கு எதிராக காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ‘இந்து மக்களின் கடவுளாகிய சபரிமலை ஐயப்பனை இழிவாக பாடல்களை பாடிய சினிமா இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் அண்ணாநகர் காவல் நிலையத்திலும் இன்று புகார் அளித்தனர். அந்தப் புகாரில், ‘சென்னையைச் சேர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. இவர், சபரிமலை ஐய்யப்ப சுவாமிக்கு எதிராக வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ ஐயாம் சாரி ஐயப்பா ’ என தொடங்கும் அப்பாடலில் அனைவருக்கும் அருள் பாலிக்கும், ஐய்யப்ப சாமியை வணங்க வரும் பக்தர்களை அச்சுறுத்துவது போல் கற்பனையை உருவாக்கி, பாடல் வரிகளை இடம் பெறச் செய்து பாடியுள்ளார். ஐயப்ப சுவாமிக்கு நடக்கும் சடங்கு முறைகளை உள்நோக்கதுடன் வடிவமைத்து பாடியுள்ளார். தற்போது, கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கானோரும் ஐயப்பனை தரிசிக்க தயாராகும் நேரத்தில் இரு பிரிவு மக்களிடையே பீதியை உருவாக்கும் கெட்ட எண்ணத்துடன் அந்த வீடியோ பாடலை இசைவாணி வெளியிட்டுள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like