‘கொடி ஒளி’ திட்டத்தை மீண்டும் தொடங்குவோம்: அர்ஜுன மூர்த்தி..!
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒரு நாளுக்கு 100 கொடிக் கம்பங்கள் என 100 நாட்களில் மொத்தம் 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, கொடிக் கம்பங்கள் நடும் பணியை பாஜகவினர் கடந்த 1-ம் தேதி தொடங்கினர். அப்போது, முறையான அனுமதி இன்றி, கொடிக் கம்பம் நட முயற்சிப்பதாக கூறி, பல இடங்களில் பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பாஜக சமூக ஊடகப் பிரிவு பார்வையாளர் அர்ஜுன மூர்த்தி கூறியதாவது: கட்சிப் பணியில் கொடியை வளர்ப்பது என்பது மிகவும் முக்கியம். திமுகவும் இப்படித்தான் வளர்ந்தது. பாஜக இப்போது வளர்ந்து வருகிறது என்பதால், திமுக எங்களை கடுமையாக எதிர்க்கிறது. பாஜக கொடிக் கம்பத்துக்கு எதிரான திமுகவினரின் செயலால், திமுக கொடிகூட மக்களுக்கு இனிமேல் பாஜக கொடியாகத்தான் தெரியும்.
பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக நான் இருந்தபோது, சோலார் விளக்குடன் கூடிய பாஜக கொடிக் கம்பங்கள் நடும்திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டுநுங்கம்பாக்கத்தில் தொடங்கினோம். பெரும்பாலும் குடிசை பகுதிகளிலேயே இவை நடப்பட்டன. இரவில் மின்தடை ஏற்படும் போது,சோலார் விளக்கு கொடிக் கம்பம் மூலம் வெளிச்சம் கிடைத்ததால், மக்களிடம் இது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இத்திட்டத்துக்கு ‘கொடி ஒளி’ என்று பெயர் வைத்தோம். முறையான அனுமதியுடன் இத்திட்டத்தை நாங்கள் மீண்டும் தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.