எந்தக் காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற மாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்..!
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகை ஆய்வகங்களிலும் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்ற 4952 ஆய்வக உதவியாளர்களுக்கு திருச்சியில் நடைபெற்ற விழாவில் பயிற்சி சான்றிதழ் வழங்கி, ‘ஆய்வக உதவியாளர்களின் பொறுப்புகளும் கடமைகளும்’ எனும் பயிற்சி கையேட்டினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய தவணை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துக்காக நாங்கள் நிதியை கோருகின்றோம். ஆனால், நீங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தைக் கணக்கில் கொண்டு பதிலளிக்கிறீர்கள்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்குவதாக கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தரமான கல்வியை வழங்கும் அதேநேரத்தில், புதிய கல்வித் திட்டத்தை புகுத்துகிறீர்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, எங்களுடைய முதன்மைச் செயலர் தலைமையில், குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கிறோம். அந்த குழு அரசுக்கு என்ன பரிந்துரைகளை வழங்குகிறதோ, அதை சார்ந்துதான் நாங்கள் முடிவெடுப்போம் என்று தெளிவாக கூறியிருந்தார்.
குழு எல்லாம் அமைத்து, மத்திய அமைச்சரை சென்று சந்தித்தப் பின்னர்தான், எங்கள் குழு மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்துக்காக நாங்கள் பணம் கேட்கவில்லை. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துக்காகத் தான் பணம் கேட்கிறோம். எனவே, இதையும் அதையும் முடிச்சுப்போடாமல், தயவுகூர்ந்து நிதியை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்டோமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற மாட்டோம், என்றார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய பதில் கடிதத்தில் குறிபிட்டுள்ளது போல நாங்கள், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு சான்றாக தலைமைச் செயலர் எழுதிய கடிதம் உள்ளது.” என்று அன்பில் மகேஸ் கூறினார்.