1. Home
  2. தமிழ்நாடு

தமிழை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - பொன்.ராதாகிருஷ்ணன்!

1

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவுக்கு, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் 30,000 பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டன. அந்த காலத்தில் அரசு பள்ளியில் கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி கொடுக்கப்பட்டது. நான் முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை வைக்கிறேன். இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். நம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளை யார் நடத்துகிறார்கள். திமுக அமைச்சர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிக் கூடங்கள் எத்தனை. திமுக மட்டுமல்லாமல் மற்ற கட்சி நிர்வாகிகளில் யார் பள்ளிக் கூடம் நடத்துகிறார்கள், அந்தப் பள்ளிகளில் இந்தி மொழி கற்று கொடுக்கப்படுகிறதா.. இல்லையா.. போன்ற விபரங்களை நீங்கள் வெளியிட வேண்டும்.

அதேபோல மொத்த அரசு பள்ளிகள் எத்தனை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை, அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும். முக்கியமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் எத்தனை மாணவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு பறிபோகியுள்ளது. தற்போதைய சூழலில் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை வஞ்சிக்கும் வகையில், இவர்கள் எதற்காக தனியார் பள்ளிக் கூடங்களை கொண்டு வந்தனர். அங்கு வழங்கும் பயிற்சிகளை ஏன் அரசு பள்ளிக் கூடங்களில் வழங்க முடியவில்லை.

தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேநேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி அளித்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். இதை ஆணவ பேச்சாக பார்க்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரவாயில்லை அவர்களில் பாதி கறுப்பு தான். எப்போதும் அவர்களின் மனம்.. செயல் ஆகிய அனைத்துமே கறுப்பு தான். அரசு ஊழியர்கள் என்று போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உணர்வு இருக்கிறது, அந்த உணர்வுகளுக்கு நீங்கள் வழிவிடவில்லை என்றால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like