சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் - அன்புமணி..!
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன. பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தத் தமிழக அரசே துணை போவது கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னையிலிருந்து புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை சுற்றுலாவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுலா வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைவிட கூடுதலான நடவடிக்கைகளைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பலி கொடுத்து விட்டு, சுற்றுலாவை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.கிழக்குக் கடற்கரையின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் மிக அதிக இரைச்சல் எழுகிறது.
இது மக்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகின்றன. ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும்u வெளிநாட்டு பறவைகளுக்குப் பெரும் இடையூறாக உள்ளன. அதுமட்டுமின்றி, ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். இதனால், பறவைகள் வருகை முற்றிலுமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகச் சரணாலயத்திலிருந்து 5 கி.மீச்சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோவளம் பகுதியில், வெடிகளைவிட பல மடங்கு இரைச்சல் எழுப்பும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அரசு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதைவிட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டிப் போராட்டத்தைப் பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பா.ம.க., நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.