தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத கூட்டாட்சியை உருவாக்குவோம்: அண்ணாமலை..!
காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அவரது பேச்சில் அரசியல் பெருந்தன்மை இல்லை. அதெற்கெல்லாம் மதிப்பளித்து பதில் சொன்னால் அது தவறானதாகி விடும். மக்களுக்கு பா.ஜ.க. பற்றி தெரியும். நாங்கள் எதற்காக உழைக்கிறோம் என்பதும் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க பா.ஜ.க. தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.
அ.தி.மு.க.வால்தான் பா.ஜ.க.வுக்கு 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்ததாக கூறுகிறார். கடந்த 2024 தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதத்தை பார்க்கவும். எத்தனை இடங்களில் டெபாசிட் போயுள்ளது, எத்தனை இடங்களில் 3-ம் இடம், 4-ம் இடம் வந்துள்ளனர் என்பதை பார்க்கவும். கூட்டணி என்று வந்த பிறகு பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க.வினர் உழைத்திருப்பார்கள். அதேபோல் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க.வினர் உழைத்துள்ளனர். பா.ஜ.க. இல்லை என்றால் அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள். தற்போதைய அ.தி.மு.க.வின் நிலையை பார்த்து அவர்கள் பரிதாபப்பட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாமல் பா.ஜ.க. வரும்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். அதற்கான முத்தாய்ப்பான கூட்டணியை 2024-ம் ஆண்டு உருவாக்கினோம். வரும் 2026-ல் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.