அரசியலமைப்பு அதிகாரம் கிடைக்கும் வரை போராடுவோம்! மெஹ்பூபா ஆவேசம்!
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு அதிகாரம் திரும்பக் கிடைக்கும் வரை அரசியல் யுத்தம் தொடரும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 370-வது விதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அம்மாநில தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 14 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முஃப்தி, கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசால் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மெஹ்பூபா முஃப்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லாவிட்டால் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிவரை ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசுக்கு உண்மையில் கட்டுப்பாடு இருந்தது. ஆனால், எங்களை அரசு அவமானப்படுத்திவிட்டது. எங்களது நிலம் மட்டுமே முக்கியமாக உள்ளது. மக்களை அரசு கண்டு கொள்ளயில்லை.அமைதிக்கா இந்த மண்ணில் லட்சக்கணக்கானோர் உயிரை விட்டுள்ளனர். அவர்களின் தியாகம் வீணாக விடமாட்டோம்.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு அதிகாரம் திரும்பக் கிடைக்கும் வரை அரசியல் யுத்தம் தொடரும். இதற்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இந்த யுத்தத்தை இங்குள்ள கட்சிகள் ஒன்றாக முன்னெடுப்போம் என்று மெஹ்பூபா தெரிவித்தார்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அணிதிரள உள்ளதாக தெரிகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.