இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம்...ஹிஜ்புல்லா புதிய தலைவர் சபதம்!
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கடுமையாகத் தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகச் சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
பல மாதங்களாக நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி அழித்தது.
இந்நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளி கிழமை தாக்குதல் நடத்தி கொலை செய்தது. எனினும், இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இதனை ஹிஜ்புல்லா அமைப்பும் நேற்று முன்தினம் உறுதி செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், எதிரிக்கு எதிரான புனித போரைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என அந்த அமைப்பு உறுதிமொழி எடுத்திருந்தது.
இந்தச் சூழலில், ஹிஜ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியில், ஹிஜ்புல்லா அமைப்பில் உள்ள தளபதிகளைக் கொல்வதற்காகத் தொடர் தாக்குதல் நடத்தப்படும். இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகப் புதிதாக வேறொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நயீம் காசிம் துணை பொது செயலாளராகச் செயல்படுவார். ஹிஜ்புல்லா அமைப்பின் துணை தலைவராகவும் நயீம் காசிம் செயல்பட்டு வருகிறார். நஸ்ரல்லா படுகொலைக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி அவர் முதன்முறையாக இன்று பேசும்போது, இஸ்ரேல் தரைவழியே தாக்குதல் நடத்த முடிவெடுத்து விட்டால், லெபனானை பாதுகாக்க, போராட ஹிஜ்புல்லா அமைப்பின் போராளிகள் தயாராக உள்ளனர் என்றார்.
கடந்த சில மாதங்களாக ஹிஜ்புல்லா அமைப்பின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டு வரும் சூழலில், புதிய தளபதிகளை ஹிஜ்புல்லா அமைப்பு நம்பியிருக்கிறது என்றார். எங்களுடைய ராணுவ திறன்கள்மீது இஸ்ரேலால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. துணை தளபதிகள் உள்ளனர். எந்தப் பதவியிலாவது உள்ள தளபதி ஒருவர் காயமடைந்து விட்டால் அவருக்குப் பதிலாக வேறொருவர் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம் என உறுதி கூறிய அவர், நீண்ட போருக்குத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.