மக்களோடு கூட்டணி தான் எங்களுக்கு வேண்டும்... அரசியல் கூட்டணிக்கு நாங்கள் வரவில்லை - தவெக துணைச் செயலாளர்..!

தவெக தலைவர் விஜய் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட வழங்கும் விழா கிளைக் செயலாளர் ராமராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு, மாவட்டச் செயலாளர் நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்று கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களின் ஆதரவு நிறைந்து எங்களுக்கு நிறைந்து இருக்கின்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய வெற்றி நாயகன் வெற்றி தளபதி அவர் தான் அதிகாரத்தில் அமரப் போகிறார். மக்கள் அவரை அமர வைக்கப் போகிறார்கள். மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இப்பொழுது இருக்கும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, உரிமை இல்லை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு ஆளுங்கட்சியினர் குரல் கொடுப்பதில்லை.
மக்களோடு மக்களாக தவெக தலைவர் மட்டும்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தான் எங்கள் தலைவர் எங்களுக்கு கூறியுள்ளார். அதற்கு நான் தான் பகிரங்கமாக ஒரு அறிக்கை கொடுத்திருந்தேன். எங்களைப் பொறுத்தவரை எங்கள் தளபதி எங்கள் அண்ணன் குடும்பத்தில் ஒருவராக அவர் எங்களுடன் உள்ளார். பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார், அதற்கு நானே ஒரு உதாரணம். பெண்களுக்கான உரிமையில் எங்கள் தலைவர் எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்.
எங்கள் தலைவர் எப்பொழுது கட்சி ஆரம்பிக்க போகிறார் என கூறிய உடனே அவர்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. ஏனென்றால் மக்களின் ஆதரவு எங்கள் தளபதிக்கு இருக்கின்றது. அவர்களுக்கு தெரியும் அந்த பயத்தால் தான் எங்கள் நிர்வாகிகளுக்கு முதலில் மிரட்டல் விடுகின்றனர். அந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. நாங்கள் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் மின்சாரம் நிறுத்துவது பேனர்கள் வைக்க கூடாது என பல்வேறு தொல்லைகள் கொடுக்கின்றனர். அதையும் தாண்டி எங்கள் தலைவரின் முகத்தைப் பார்த்து மக்கள் கூட்டமாக சேருகின்றனர். தமிழகமே எங்கள் தலைவரை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த பயம் என்பதெல்லாம் எங்களுக்கு எப்போதுமே கிடையாது, தலைமையும் தளபதியும் எங்களுடன் இருக்கும்போது எங்களுக்கு பயம் என்பதே கிடையாது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனையில் புதுப்பிக்க வேண்டும் என கேட்டு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தோம், அதை 15 ஆண்டுகளாக எதையும் பண்ணாத முதல்வர்கள் தற்பொழுது ஏன் உடனடியாக அந்த மருத்துவமனையை திறக்க வேண்டும்? அதற்கான காரணம் என்னவென்றால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என அந்த ஒரு நோக்கத்தோடு தான் அதை திறந்து இருக்கிறார்கள். ஓட்டுக்காக மக்களை நாடுகிறவர்கள் நாங்கள் அல்ல, எங்கள் தளபதி அந்த மாதிரி தலைவர் அல்ல. 30 ஆண்டுகளாக நாங்கள் மக்களோடு பணியில் தான் இருக்கின்றோம். மக்களுக்கு அனைத்தும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். எப்பொழுது மருத்துவமனை தெரிந்திருப்பது நல்ல விஷயம் தான் வரவேற்க தக்க கூடியதுதான். ஆனால் மக்களுக்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளதா என பார்க்க வேண்டும். அதனை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
2026 அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மக்களுடனான கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான நிறைய வாய்ப்புகளை மக்கள் கொடுத்துள்ளார்கள். மக்களோடு கூட்டணி தான் எங்களுக்கு வேண்டும். அரசியல் கூட்டணி பயணிக்க நாங்கள் வரவில்லை. மக்களுடனான கூட்டணியில் தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். அதுதான் எங்கள் கருத்து என கூறினார்.