1. Home
  2. தமிழ்நாடு

நாம் தமிழர் சீமான் மீது வரதட்சணை புகார்..!

1

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா என்ற பெண், வரதட்சணைக் கொடுமையாலும் கணவரின் உடல்ரீதியிலான தொல்லையாலும் கடந்த மாதம் 28ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் தான் ஏன் தற்கொலை முடிவை எடுத்தேன் என்பதற்கான 3 ஆடியோக்கள் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் கண்ணீரை வரவழைத்தன. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த வழக்கில் ரிதன்யாவுக்கு நீதி கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குமுறி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் ரிதன்யா விவகாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “இந்தத் தற்கொலைக்கு எந்தப் பெண்கள் அமைப்பும், மாதர் சங்கத்தினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எனக்கு எதிராகப் போராடிய மகளிர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் ரிதன்யா விவகாரத்தில் குரல் கொடுக்காதது ஏன்? குறைந்தபட்சம் இந்த பிரச்சனைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த பிரச்சனைக்குக் குரல் கொடுக்காமல் எங்கே போய்ப் படுத்துக் கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டுக் கிடக்கார்களா அல்லது டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கிடக்கார்களா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினரும், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து தங்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சீமான் மீது புகார் அளித்தனர். பின்னர் சீமானின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், கிழித்தெறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது சீமான் மீதுதான் வரதட்சணை புகார் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பேட்டியில் அவர் கூறியது என்னவெனில், ‘எனது மாமியாரிடம் 85 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதை என்னிடம் கொடுங்கள், பயிர் வைத்து சாகுபடி செய்வதாகச் சொன்னேன். என் மனைவி ‘கேட்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள்’ எனச் சொல்லிவிட்டார். நானாகப் போய் என் மாமியாரிடம் கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் மனைவியே அதைக் கேட்டு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதைப்போல், வரதட்சிணை கேட்பதும் தவறுதான். இவர் மனைவியை விட்டு அவரது தாய் வீட்டில் 85 ஏக்கர் நிலத்தைக் கேட்கச் சொல்வதும் குற்றம்தானே?” என்றனர்.

அவர் 85 ஏக்கர் குறித்து பேசிய காணொளியையும், பெண்கள் குறித்துத் தவறாகப் பேசிய காணொளியையும் இணைத்து ஆணையரிடம் புகார் கொடுக்கிறோம் என மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து சீமானுக்கு எதிராகக் கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Trending News

Latest News

You May Like