1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கு வெறும் 30 நாள் போதும்... போதை இல்லா தமிழகமாக மாற்றி காட்டுவோம் : அன்புமணி ராமதாஸ்..!

1

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே. காவல்துறைக்கு தெரியாமல் யாரும் கள்ளச்சாராயம் விற்க முடியாது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது யார்?

மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.

 நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்.பி மற்றும் கலெக்டர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் மதுவை குடித்து குடித்து குடி நோயாளிகளாக மாறிவிட்டார்கள். அதுதான் கள்ளச்சாராயத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. இதற்கு பூரண மது விலக்கு தான் தீர்வு. பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தாலே போதும், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்துக் காட்டுவோம்" என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like