1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்முடைய சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்: சத்யராஜ்!

1

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோட்டில் கூலி தொழிலாளர்களாக அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் இல்லாத கட்டுமான நிறுவனங்களையே பார்க்க முடியாது. மெட்ரோ முதல் பாலம் கட்டுவது, வீடு கட்டுவதை வரை எல்லா பணிகளையும் வட மாநில தொழிலாளர்கள் நிறைந்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் என்பது குறித்து சரியான கணக்கெடுப்புகள் இல்லை.. ஆனால் சுமார் 50 லட்சம் பேர் அளவிற்கு இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. தினசரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், கோவை ரயில் நிலையத்திற்கும், திருப்பூர் ரயில் நிலையத்திற்கும் வட மாநில தொழிலாளர்கள் புதிது புததாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில் தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்முடைய திராவிட மாடல், நம்முடைய திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து இங்கு ஏன் வருகிறார்கள்.. அங்கு சரியில்லை என்பதால் வருகிறார்கள். அப்படி வரும் எல்லாருக்கும் உண்மையிலேயே, நம்முடைய திராவிட மாடல், திராவிட சித்தாந்தங்கள் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.. அவர்கள் எப்படியும் சந்ததி சந்தியாக இங்குதான் இருக்க போகிறார்கள்.. நம்மூரில் இருந்து அமெரிக்காவிற்கு பிழைக்க போனவர்கள்.. அமெரிக்காவை விட்டு வருவது இல்லை.. போனால் அமெரிக்காவில் செட்டில் தான்.. லண்டனுக்கு போனாலும் லண்டனில் செட்டில் தான்.. அதுமாதிரி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்களும், பீகார் போன்ற பல்வேறு வடமாநிலங்களில் கஷ்டத்தில் இருக்கும் வருபவர்களுக்கு தமிழ்நாடு வந்து அமெரிக்கா மாதிரி தான்.. இங்கிருந்து அவர்கள் போக மாட்டார்கள்.

அவங்களுக்கு சுயமரியாதை என்றால் என்ன, பகுத்தறிவு சிந்தனை என்றால் என்ன, திராவிட மாடல் என்றால் என்ன போன்ற விஷயங்களுக்கு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தாலும் கூட.. எப்படியும் ஒரு ஜெனரேசனில் கற்றுக்கொள்வார்கள்.. அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே, சுயமரியாதை என்றால் என்ன, பகுத்தறிவு என்றால் என்ன, பெண் விடுதலை என்றால் என்ன, பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை.. தாழ்ந்தவனும் இல்லை என்பதை சின்ன வகுப்பு எடுத்தால் போதும்.. ஏனெனில் வட மாநிலங்களில் பிறப்பின் அடிப்படையில் கொடுமைகளுக்கு அளவே இல்லை.. எனவே வகுப்பு எடுத்து கற்றுக்கொடுத்தால் தான், ஏன் திராவிடம் 40க்கு 40 அடித்தார்கள் என்பது தெரியும். இதை எல்லாம் சொல்லி கொடுத்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் 50 சதவீதம் அல்ல.. அங்குமே ஜெயித்திருப்போம். மக்களை கேள்வி கேட்கவிடுங்கள்.. கண்டிப்பாக வட இந்தியாவிலும் மாற்றம் வரும். இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Trending News

Latest News

You May Like