1. Home
  2. தமிழ்நாடு

வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வு சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது, திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, “கலைஞர் 100 – வினாடி-வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார். தலைவர் கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில் இருந்துதான் கணக்கிடப்பட வேண்டும்” என்று சொல்வார். அப்படி, நிறைந்த பிறகும், தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு நவம்பரில்தான் இந்தப் போட்டி நிறைவடைந்திருக்கிறது. சுமார் 14 மாத காலம் தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்கத்தின் வரலாறு இளம்தலைமுறையிடம் விதைக்கபட்டிருக்கிறது! இந்தப் போட்டியின் கேள்விகளுக்கு பதில் தேடி, நீங்கள் தயாரானபோது, பழைய வரலாற்றைப் படித்திருப்பீர்கள். அதன்மூலம் புது சிந்தனைகள் உங்களுக்கு உருவாகியிருக்கும். இந்தச் சிந்தனைகள்தான் இந்த இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்தும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டியின் வெற்றி என்பது, புது சிந்தனையாளர்களை உருவாக்குவதுதான். இரண்டு லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தைப் பற்றிப் படிக்க வைத்ததன் மூலமாக, இந்தப் போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது.

இது வாட்ஸ்அப் யுகம். வாட்ஸ் அப்-இல், யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதில் வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.

பேசிப் பேசி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். அப்படிப் பேச்சாளர்களை – எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும். புதிய புதிய செய்திகளை – புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது – சுவை புதிது – பொருள் புதிது – என்ற வகையில சொல்ல வேண்டும். மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைக்கூட மிகச் சுவையாக - மக்கள் மனதில் பதியும் வகையில் சொல்ல வேண்டும். நம்முடைய கொள்கை வீரர்களின் பேச்சு நறுக்கென்று இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒருவரின் பேச்சு, மூளையை தொட வேண்டும்! அதன் மூலமாக, அவர்கள் மனதை ரீச் செய்ய வேண்டும்! அப்படி நீங்கள் அனைவரும் கருத்து சொல்லும் ஸ்டைல்-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

போட்டியில் கலந்துகொண்ட நிறையபேர் இங்கு இருக்கிறீர்கள். நான் இப்போது சில கேள்விகளை உங்களிடம் கேட்கப்போகிறேன். பதில் தெரிந்தவர்கள் உட்கார்ந்தே சத்தமாகச் சொல்லுங்கள் போதும். லெனின்தான் உங்களிடம் கேள்வி கேட்டார். இப்போது ஸ்டாலின் கேட்கப் போகிறார். முதல் கேள்வி எளிமையானது – ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னது யார்? (தந்தை பெரியார்). இரண்டாவது கேள்வி - பேரறிஞர் அண்ணா அவர்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் டாக்டரிடம், “நான் படிக்கும் புத்தகத்தை, நாளை படித்து முடித்துவிடுவேன், அதன்பிறகு அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அது என்ன புத்தகம்? (மேரி கரோலி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன்). மூன்றாவது கேள்வி – தந்தை பெரியார் “எனது பகுத்தறிவு சமூகசீர்திருத்தப் பணியின் முன்னோடி” என்று யாரைச் சொன்னார்? (அயோத்திதாசப் பண்டிதர்).

இவை சாதாரண கேள்விகள்தான். இதுபோன்று அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், தியாக வரலாற்றை – நம்முடைய இயக்கத்தின் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய பணி அமைந்திட வேண்டும். அதற்கு இதுபோன்ற வினாடி-வினா நிகழ்ச்சிகள் நிச்சயமாகப் பயன்படும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்து, இதை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து, நடத்திக்காட்டி, அதில் வெற்றி கண்டிருக்கும் நம்முடைய தங்கை கனிமொழி அவர்களுக்கும், அவருக்கு துணைநின்ற மகளிரணிக்கும், அனைவருக்கும் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like