நடிகை நமீதாவுக்காக வருந்துகிறோம்: அமைச்சர் சேகர் பாபு!
அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நடிகை நமீதாவை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்க கெடுபிடிகள் இருந்ததாக அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில் என்னையும் இணைத்து தனது ஆதங்கத்தை கொட்டினார். நடிகை நமீதா கூறிய புகார் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நமீதா அவர்கள் மனம் புண்படும்படியாகவோ, சட்டவிரோதமாகவோ ஏதேனும் நடந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். சகோதரி நமீதா வருத்தப்பட வேண்டாம். ஒரு வேளை அவர் பெரிய அளவில் வருத்தப்பட்டிருந்தால் அதற்காக நாங்களும் வருந்துகிறோம். இவ்வாறு சேகர் பாபு கூறினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற போது அவமானத்தை சந்தித்ததாக நமீதா வீடியோ மூலம் நேற்று பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், என்னை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் விடவில்லை. என்னை அங்கிருந்த அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் கேட்டனர். நான் இந்துவா என்பதற்கான சான்றிதழையும் கேட்டனர். என் சொந்த நாட்டிலேயே நான் அந்நியமாக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. இதுவரை என்னிடம் யாருமே ஜாதி சான்றிதழை கேட்டதில்லை. நான் இந்துவாக பிறந்தவள். என் குழந்தைகளுக்கும் இந்து பெயரைத்தான் வைத்துள்ளேன். அந்த அதிகாரிக்கு எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை. இது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கோயில் நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் மீனாட்சி அம்மன் கோயிலின் தெப்பக் குளத்தை தாண்டி ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள் கோயிலுக்கு வரும்போது, சந்தேகம் இருந்தால் கோயில் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு. அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி, நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் கணவர் இந்து, இந்து முறைப்படி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம் என நமீதா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் விஐபி தரிசனம் முடித்து சென்றனர். முக்கிய பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே எனவும் கோயில் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.