த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்..!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:-
விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது. பா.ஜ.க., அதன் கூட்டணி கட்சிகள்தான் இதில் அரசியல் செய்கின்றன.
விஜய்யை கையில் எடுக்க பா.ஜ.க. பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது. சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்; விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சியை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சான்று ராகேஷ் கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.