1. Home
  2. தமிழ்நாடு

இந்த குற்றத்தில் ஈடுபட்டது அண்ணாமலை தான் என்று நாங்கள் பதில் குற்றச்சாட்டு வைக்கிறோம் - மா.சுப்பிரமணியன் பதிலடி!

Q

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஜனவரி மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், மாணவியை மிரட்டுவதற்கே சார் என்று போனில் பேசியதாகவும், அந்த நேரத்தில் ஞானசேகரன் செல்போன் ஏர்ப்ளேன் மோடில் இருந்தது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும், மாணவி குறிப்பிட்ட யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அன்றைய தினம் ஞானசேகரன் தொடர்புகொண்ட திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினார் என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் கோட்டூர் சண்முகம், மா.சுப்பிரமணியன் ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் காவல் துறை உள்ளது. மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து ஐந்தே மாதங்களில் மிகப்பெரிய அளவிலான தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. காவல் துறையின் செயல்பாட்டுக்கு நீதிபதி கூட பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேசியதை நானும் பார்த்தேன். சண்முகம் என்கிற வட்டச் செயலாளர் எனக்கு போன் செய்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இது ஒரு குற்றச்சாட்டா? மாவட்டச் செயலாளரான எனக்கு கீழ் 83 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 10 - 15 வட்டச் செயலாளர்கள் எனக்கு அழைப்பார்கள். இந்த தேதியில் இந்த நேரத்தில் எனக்கு வட்டச் செயலாளர் போன் செய்ததால், என்னையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கே தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்த குற்றத்தில் ஈடுபட்டது அண்ணாமலை தான் என்று நாங்கள் பதில் குற்றச்சாட்டு வைக்கிறோம். அண்ணாமலை இதற்கு என்ன பதில் சொல்வார்? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. ஆதாரம் இருந்தால் வெளியிட்டு நீதிமன்றத்தை அணுகலாம். மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. எது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like