திமுக பேஸஞ்சர் ரெயில்.. ஊர் போய் சேராது! அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி !

"தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருவது பற்றி எல்லாம் வெளியில் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் அது தெரிய வரும்" என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு இலவச மடிக்கணினியை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் எனினும் அதை தாண்டி அரசியல் நாகரீகம் கருதி முதலமைச்சர் தாயார் மறைவிற்கு மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்கள் பிரச்சனைக்கு இறுதியான தீர்வாக அமையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் மற்றும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
திமுக பாசஞ்சர் ரயில் ஊர் சென்று சேராது. அதிமுக எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயில். ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மீண்டும் 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும். தேர்தல் பணிகளை ஏற்கனவே அதிமுக ஆரம்பித்துவிட்டது. தேர்தல் நேரத்தில் உதய சூரியன் அஸ்தமித்து இல்லாத அளவிற்கு காணாமல் போய்விடும்
.
ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்தே ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன் என கூறி வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை நிலையை நாட்டுக்கு தெரியப்படுத்தவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் மரணத்திற்கு யார் காரணம் என தெரிய வரும். திமுகவில் இருந்து நிறைய கட்சிகள் அதிமுகவிற்கு வரலாம். ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள் யாரும் அந்த முடிவை எடுக்கமாட்டார்கள்.
பிரேக் டவுன் ஆகி நிற்கும் கட்சி திமுக. அதிமுக நன்றாக சென்று கொண்டிருக்கும் வண்டி. எந்த கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்பதெல்லாம் வெளியில் கூற முடியாது. விரைவில் தேர்தல் நேரத்தில் தெரிய வரும் என்றார்.
கடந்த 6 மாத காலமாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் கூறியது பற்றிய கேள்விக்கு, கட்சிக்குள் கருத்து மாற்றுகள் இருக்கும். அதனை வெளிப்படையாக சொல்வது தவறு. இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.