அனைத்து துறையும் அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் : முதல்வர் ஸ்டாலின்..!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குகிற வகையில், மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள். விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. அனைத்துத் துறையும் வளர வேண்டும், அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம்.
நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப் புறங்களும் வளர்ந்தாக வேண்டும். ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.
தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.