1. Home
  2. தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம்...ஆனால்...

1

சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆம்னி பஸ்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக ஆம்னி பஸ் நிர்வாகிகள் நேற்று எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, 'ஆம்னி பஸ்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பயணிகளை சென்னை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமதி கேட்டுள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம், முழுமையாக மாற காலக்கெடு வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் இது தொடர்பாக 2 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படும் ' என்றார்.

Trending News

Latest News

You May Like