1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஆட்சியில் இல்லை...இருந்தும் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது - மத்திய இணை அமைச்சர்..!

1

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார் மத்திய நீர்வளத்துறை மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா. அப்போது, ரயில் நிலையத்திலிருந்த பயணிகளிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூபாய் 300 கோடி கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1,303 கிலோமீட்டர் தொலைவிற்குப் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,242 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்மயமாக்கல் பணிகள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் ரயில் பாதைகள் மின்மயமாக்கல் பணி 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பணிகள் முடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரூபாய் 33 ஆயிரத்து 467 கோடிக்கு 22 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், அம்ரித் பாரத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களில் ரூபாய் 2 ஆயிரத்து 950 கோடிக்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூபாய் 1,460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரூபாய் 6.50 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூபாய் 13.50 கோடி மதிப்பிலும், காரைக்கால் ரயில் நிலையங்களில் ரூபாய் 109 கோடியிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளத்தில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசு அரசியல் செய்யாமல் பல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு நிலம்
கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும்” என்றார்.

இந்த ஆய்வின்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது உள்ளிட்ட பல அலுவலர்கள் உடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like