1. Home
  2. தமிழ்நாடு

நிதிஷ் குமார் ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து விலகுவார் என்பது எங்களுக்கு முன்னரே தெரியும்: கார்கே

1

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிஹார் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இண்டியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இண்டியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் “நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியிலிருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்,” என காங்கிரஸ் தலைவரும் இண்டியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக மாநிலம் கலபுராகியில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்பியிருந்தால் இருந்திருப்பார். ஆனால் அவர் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேசியபோது, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளார் என்று கூறினர்,”என்றார் கார்கே.

“தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதால் நாங்கள் எதையும் சொல்லவில்லை. இன்று அந்த தகவல் உண்மையாகி விட்டது,” என மேலும் கார்கே தெரிவித்தார்.

நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து விலகியதற்கு காங்கிரசை சாடியுள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நியாயம் செய்யாமல், அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்காமல் இருந்தால், பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் தாக்கூர்.

Trending News

Latest News

You May Like