நீட் தேர்வை ஏற்கிறோம்.. மாணவர்கள் மரணத்திலும் கீழ்த்தரமான அரசியல் - பிரேமலதா காட்டம் !
தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக கொடியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இரண்டு நாளாக நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது.
தங்கள் அரசியல் வெற்றிக்காக செய்யப்படுகிறது. மேலும் அரசியல் லாபத்திற்காக மாணவர்களை மூளைச்சலவை செய்து இளைஞர்கள் உயிரோடு விளையாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் செய்யும் நிலைதான் தற்போது இங்கு உள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, மாணவர்களை அலைக்கழிப்பது என்ற கலாச்சாரத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களாக என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை என்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளும். கல்வித்தரம் உயரும். அனைவருக்கும் ஒரே கல்வி என்பதை தேமுதிக வரவேற்கும்.
ஒரு மாணவன் இறந்தால் உடனே 5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள். தொடர்ந்து மாணவர்கள் இழப்பை சந்திக்கும் போது காசு கொடுத்தார்களா? மரணத்தில் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியலை நான் தமிழ்நாட்டில் பார்க்கிறேன்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் வந்தது. மாணவர்களுக்கு தைரியம் கொடுங்கள். அரசியல் ஆதாயத்திற்காக இந்தி எதிர்ப்பு என்று விளம்பரம் செய்கிறார்கள்.
தமிழ் நம்முடைய தாய்மொழி. ஆனால் குடும்பத்தை காப்பாற்ற அனைத்து மொழியும் அவசியம் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
newstm.in