வயநாடு கோரம் : தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல்களை தேடும் பணி தீவிரம்!
வயநாட்டில் நான்காவது நாளாக இன்று மீட்டுப் பணிகள் தொடர்கிறது.இதுவரை 316 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. மேலும் 240 பேரை காணவில்லை என்றும் கேரளா அரசு தெரிவித்துள்ளது. இதன் பிறகு காணாமல் போனவர்களை உயிரோடு மீட்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கேரளா அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் வயநாடு பகுதியில் ராணுவத்துடன் இணைந்து இஸ்ரோ மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
மண் சரிவு ஏற்பட்ட மலைப்பகுதியை RESAT SAR எனும் தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் எடுத்து இஸ்ரோ தகவல்களை வழங்கி வருகிறது. கடந்த முறை ஏற்பட்ட மண் சரிவை விட தற்போது ஏற்பட்டுள்ள மண் சரிவு பல மடங்கு பெரியது எனவும் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தனது செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம் மூலம் தேடும் பணியை ராணுவம் மேற்கொண்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3 மீட்டர் ஆழம் வரை புதைந்திருக்கும் உடல்களை கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.