அமுலுக்கு வந்த ''வாட்டர்பெல்'' திட்டம்..! இனி தமிழக பள்ளிகளில் தினந்தோறும் 3 முறை..!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய ''வாட்டர் பெல்'' திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எழுதி உள்ள கடிதத்தில், ''மாணவர்களுக்கு நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்திடவும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு ''வாட்டர் பெல்'' அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு 5 நிமிடம் ஒதுக்க செய்ய வேண்டும். மூளை 75 சதவீதம் நீரால் ஆனது. சரியான அளவில் தண்ணீர் குடிப்பது அதன் செயல்திறனை அதிகரிக்கும். நீர் குடிப்பதால் உடல் அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. வழக்கமான வகையில் பெல் அடிக்காமல் வேறுபட்ட ஒரு மணியை பயன்படுத்தி பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும், தண்ணீர் மணியின் சத்தம் கேட்கும்போது அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கலாம்.
அனைத்து பள்ளிகளில் தண்ணீர் வசதியை பராமரிக்கவும், மாணவர்கள் பள்ளியில் தண்ணீர் குடிப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல ஊக்குவிப்பதும், பள்ளிகளில் சுத்தமான குடிநீரை வழங்கவும் வேண்டும். இதுவே மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி வெற்றியை ஆதரிப்பதற்கான எளிய ஆனால் சக்திவாய்ந்த முறையாகும்." என அதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' அடித்து மாணவர்கள் தண்ணீர் அருந்தும் முறை இன்று முதல் (ஜூன் 30) நடைமுறைக்கு வந்தது. அதன்படி சென்னை எம்எம்டிஏ அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ''வாட்டர் பெல்'' அடித்தபோது மாணவர்கள் தண்ணீர் குடித்தனர்.