சூர்யா படப்பிடிப்பில் விதிமீறல் நடந்ததா ? போலீசார் விசாரணை..!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26ம் தேதி முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள ‘நவாநகர் பேலஸ் ‘ என்ற இடத்தில் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டு வந்தது. கடந்த 8ம் தேதி சண்டை காட்சி நடந்தபோது நடிகர் சூர்யாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சூர்யா சென்னை கிளம்பிவிட்டார்.
இந்நிலையில், இந்தப் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த 27ம் தேதி சுற்றுலா விசாவை பெற்று வந்துள்ளனர். அவர்கள் ஊட்டியில் உள்ள, 3 பிரபல தனியார் ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர்.
பொதுவாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வந்து தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து போலீஸ் நிலையம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதனையடுத்து படப்பிடிப்பிற்காக வந்துள்ள, 155 ரஷ்யர்களில் 42 பேர் ரஷ்யா திரும்பிச் சென்றனர்.
தற்போது, 113 பேர் ஊட்டியிலேயே தங்கி உள்ள நிலையில் ரஷ்யா நாட்டினர் சுற்றுலா விசாவில் வந்து திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்பதாலும் ரஷ்யா நாட்டினரின் விபரங்களை நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு முறையாகத் தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நீலகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் சம்பந்தபட்ட தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.