1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை! தவணையில் பொருட்கள் வாங்குகிறீர்களா?

எச்சரிக்கை! தவணையில் பொருட்கள் வாங்குகிறீர்களா?


தவணை முறையில் செல்போன் வாங்கியவரின் ஆவணங்களை வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ள மோசடி அம்பலமாகியுள்ளது.

நீலகிரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தவணை முறையில் செல்போன் வாங்குவதற்காக ஆவணங்களை கொடுத்துள்ளார். அதே ஆவணங்களில் வேறு ஒரு ராஜேஷ் என்ற நபருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி, நீலகிரி ராஜேஷின் வங்கிக் கணக்கில் தவணை கட்ட வைத்துள்ள நவீன மோசடிக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரிராஜேஷ், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி வேலைபார்த்து வருகிறார். தன்னுடைய வங்கிக் கணக்கில் 14 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து வங்கியைத் தொடர்பு கொண்டுள்ளார். வங்கித் தரப்பில் அது மோட்டார் சைக்கிள் வாங்கியதற்கான தவணைப் பணம் என்று கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், தான் மோட்டார் சைக்கிள் எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். வங்கித் தரப்பில் ஆவணங்களை காட்டிய போது, நீலகிரி ராஜேஷ் ஆவணங்களில் வேறு ஒரு நபரின் புகைப்படம் ஒட்டப்பட்டு மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் திருவேற்காட்டைச் சேர்ந்த யோகேஸ்வரன், மதுரவாயல் ராஜேஷ், விக்னேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மதுரவாயல் ராஜேஷ் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்க்கு தவணை முறையில் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரிடம் தவணை முறையில் செல்போன் வாங்கிய நீலகிரி ராஜேஷின் ஆவணங்களைக் கொண்டு, புகைப்படத்தை மாற்றி மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் மதுரவாயல் ராஜேஷ்.

விசாரணையில் இதைப் போல் 6 மோட்டார் சைக்கிள்கள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 6 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர் போலீசார். தவணை முறையில் பொருட்கள் வாங்குவதற்கு, கடன் வழங்கும் நிறுவனத்தையோ அல்லது வங்கிகளையோ நேரடியாக தொடர்பு கொண்டு வாங்குவது தான் முறையாகும். தனிநபர்களிடம் ஆவணங்களைக் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்க வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like