1. Home
  2. தமிழ்நாடு

இன்று விடிய விடிய கண் விழித்து ஈசனை வணங்குங்கள்... நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்..!

1

மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மகா சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.

புராண கதைகள்: மகாசிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான்.

அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான். சிவனின் இடது பாகத்தினை அன்னை பார்வதி பெற்ற தினம் இந்த நாள்தான். பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கியது இந்த நாளில்தான். இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில்தான். குபேரன் செல்வத்தின் அதிபதியான நாளும் இந்த நாள்தான்.

சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான்.

கண்ணப்ப நயினார் சிவபெருமானுக்காக தனது கண்களை தானமாக அளித்ததும் இந்த நாள்தான். சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்த தினம் சிவராத்திரி. இன்றைய தினத்தில் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.

மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை பக்தியுடன் கடைபிடிக்க வேண்டும். மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண்டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும்.

மகா சிவராத்திரி நாளில் அருகில் உள்ள ஆலயங்களில் இரவில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்வோம். சிவ ராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது.

நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தியையும் வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம்.

வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.

Trending News

Latest News

You May Like