1. Home
  2. தமிழ்நாடு

ஒரேயொரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். உங்களுடையக் கனவுகள்தான் எங்களுடைய லட்சியங்கள் - பிரதமர் மோடி..!

1

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தார்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரதமர் வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"என் இனிய தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்! திருநெல்வேலிக்கு வணக்கம்!

திருநெல்வேலி மக்களின் உற்சாகம், வரவேற்பைப் பார்த்து திமுகவுக்கும், காங்கிரஸின் இண்டியா கூட்டணிக்கும் தூக்கம் தொலைந்துபோயிருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மிகக் கடுமையாக உழைத்துள்ளது. நல்ல திட்டங்களைத் தந்துள்ளது. திருநெல்வேலி, சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் விரைவில் புல்லட் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழ்க் கலாசாரத்தை நேசிப்பவர்கள், பாஜகவை நேசிக்கத் தொடங்கிவிட்டீர்கள். அதனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளது. உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்று ஒரு கலாசார மையம் ஏற்படுத்தப்படும்.

இண்டியா கூட்டணியின் சித்தாந்தம் வெறுப்பினாலும், எதிர்ப்பினாலும் உருவானவை. அவர்கள் திராவிடத்தின் பெயரில் தமிழ் அடையாளத்தையும், பாரம்பரியத்தை அழிக்க நினைக்கிறார்கள்.

எங்களுடைய லட்சியம் தூய்மையான அரசியல். இதில் பயணிக்கும்போது, எம்ஜிஆர் கனவுகளை பாஜக தமிழ்நாட்டில் முன்னெடுத்துச் செல்கிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு தேசவிரோத செயல்களைச் செய்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் உயிர்நாடியான கச்சத்தீவை நம்மிடமிருந்து துண்டித்து வேறு நாட்டிடம் கொடுத்தார்கள்.

இந்தச் செயலால் தமிழ்நாட்டு மீனவர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். கச்சத்தீவை திரைமறைவில் ரகசியமாக தாரைவார்த்துக் கொடுத்ததை, பாஜகதான் சமீபத்தில் ஆவணங்களுடன் அம்பலப்படுத்தியது. இது அவர்கள் செய்த தேசத் துரோகம்.

தமிழ்நாடு போதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரமிக்கவர்களின் அனுமதியோடு போதைப் பொருள் இங்கு தலைவிரித்தாடுகிறது. பல நூறு கோடி ரூபாய்க்குத் திறந்தவெளியில் போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது. இது யாருடையப் பாதுகாப்பில் நடக்கிறது என்பதைக் குழந்தைகள்கூட சொல்வார்கள்.

நரேந்திர மோடி இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். போதைப் பொருளை தேசத்திலிருந்து ஒழிப்பேன்.

இந்தத் தேர்தலுக்கான எனது கடைசி பிரசாரம் இது. தேசிய ஜனநாயக் கூட்டணியும், பாஜகவும் தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது என்று திமுகவும் இண்டியா கூட்டணியும் கேட்டதற்காக அவர்கள் வியந்துபோகும் அளவுக்கு மிகப் பெரிய ஆதரவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்கப்போகிறீர்கள்.

ஒரேயொரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். உங்களுடையக் கனவுகள்தான் எங்களுடைய லட்சியங்கள்" என்றார் பிரதமர் மோடி.

Trending News

Latest News

You May Like