விஜே சித்ராவின் தந்தை தற்கொலை!மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை..!
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில் திடீரெனத் திருவான்மியூர் வீட்டில் தனது மகளின் துப்பட்டாவால் அவருடைய தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற அற்புதமான கேரக்டரில் நடித்து வந்தார். இவர் நிறைய விளம்பரங்களிலும் ஆவணப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்குப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்கள்! இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி சித்ரா, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் ஒரு நட்சத்திர விடுதியில் அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் (இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது) மீது புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்துதான் சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாகக் கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் காமராஜ். இவர் தனது மகள் இறப்பால் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். தனது மகளின் இறப்புக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் போராடினார்.
அண்மையில் கூட ஹேமந்த் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் தனது மகளுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா கிடைக்காதா என்ற விரக்தியில் இருந்திருக்கலாமெனத் தெரிகிறது. இதனால் காமராஜ், தனது மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா இறந்தார். இதனால் அவர்களது குடும்பத்திற்கு 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு என்பது பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருந்தது. தற்போது சித்ராவின் அப்பாவும் டிசம்பர் 31 ஆம் தேதி இந்த 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளில் இறந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்திற்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டும் பெரும் சோகத்தையே கொடுத்திருக்கிறது.