காவல்துறையை கண்டித்து விசிக போராட்டம் : பாஜகவினர் உருவ பொம்மையை எரித்து முழக்கம் !

ஆத்தூரில் பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்தொல்.திருமாவளவன் மீது இந்து பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தியும், திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து சமூக வலை தளங்களில் பரப்பியவரை கைது செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரியார் சிலை முன்பு ஆத்தூர் நகர செயலாளர் ஆட்டோ செல்வம் தலைமையில் திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும்,பதிவு செய்த வழக்கை திரும்ப பெறக்கோரியும் அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை உடனே கைது செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், திருமாவளவன் மீது அவதூறு பரப்பிய நபரின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் இராஜிவ்காந்தி, சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல், கலை இலக்கியப் பேரவையின் மாநில துணை செயலாளர் வீரா. ஆதித்தியன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.