வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா - முத்தரசன்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். உலகின் முதல் நிலையில் இருக்கும் கியூபா வீராங்கனையை அவர் அரையிறுதியிலேயே வீழ்த்தி விட்டார்.அந்தப் போட்டிவரையில் 50 கிலோவாக இருந்த அவரது எடை, இறுதிப் போட்டியின் போது எவ்வாறு அதிகரித்தது, அதற்குப் பின் என்ன சதி அரங்கேறியது என்பது விடைகாணப்பட வேண்டிய கேள்விகளாகும்.
100 கிராம் எடை அதிகம் என்று கூறி அவரைத் தகுதிநீக்கம் செய்திருப்பதும், ஏற்கனவே வெள்ளிப் பதக்கத்துக்கு உரிய வெற்றியைப் பெற்றிருந்தும் அதை நிராகரித்திருப்பதும், போட்டியிடாமலேயே அமெரிக்காவைச் சேர்ந்தவர் தங்கப்பதக்கம் பெற்றிருப்பதும் பெரும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. மல்யுத்த வீரர் சங்கத்தின் தலைவரான பா.ஜ.க. எம்.பி., பிரிஜ் பூஷன் சிங் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து சகவீரர்களுடன் சேர்ந்து அவர் போராடினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் போது, காவல் துறையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். கடைசிவரை பிரிஜ் பூஷன் சிங் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும். "தோற்றுவிட்டேன், போராடச் சக்தியில்லை" என்று வினேஷ் கூறியிருப்பது நெஞ்சைப் பிளக்கும் துயரமாகும். "சோர்ந்து போக வேண்டாம் மகளே! போராட்டக்காரியான உன் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் மதிப்பும், பேரன்பும் எந்த விருதையும் விட உயர்வானது. இனியும் நீ போராடுவதற்கான களங்கள் ஏராளமாக உள்ளன" என்று அவரைப் பற்றிய பெருமிதத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கிறது.
வினேஷ் மட்டுமல்லாமல், இன்னும் இரண்டு வீராங்கனைகளும், நியாய விரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் குழுவிடம் உரிய வகையில் ஆட்சேபணை தெரிவித்து நியாயம் கிடைக்க இந்தியா போராடுவதோடு, எதிர்காலத்தில் இவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.