பாராட்டு விழாவில் மயங்கி விழுந்த வினேஷ் போகத்.!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் அவரது மனு கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இருந்து வினேஷ் போகத் நாடு திரும்பினார். சனிக்கிழமை அன்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கத்தை பெற முடியா விட்டாலும் நாடு முழுவதும் அனைவரது மனங்களையும் வென்ற வினேஷ் போகத்துக்கு மேளதாளத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர் காரில் அவரது சொந்த ஊரான அரியானா மாநிலம் பலாலி கிராமத்துக்கு சென்றார். மக்கள் வழிநெடுகிலும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து இருந்தனர்.
பாராட்டு விழாவின் போது உடல்நிலை சரியில்லாமல் வினேஷ் போகத் மயங்கி விழுந்தார். 20 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்து தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடந்தது. களைப்பாக காணப்பட்ட அவர், மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.