1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று விநாயகர் சிலை கடலில் கரைப்பு..!

1

 சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவித்துள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன் பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,524 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 

கடந்த வாரம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், ஒவ்வொரு வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிறிய, சிறிய விநாயகர் சிலைகள் முழுவதுமே அன்றைய மறுநாள் அருகில் இருக்கக்கூடிய குளங்கள், கடற்கரையில் போன்ற பகுதிகளில் கரைக்கப்பட்டது.

அதில் வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய விநாயகர் சிலைகள் முழுவதுமே பட்டினம்பாக்கம் கடற்கரையில் காலை ஏழு மணி முதல் கரைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பான முறையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக 90 அடி டிராலி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் ஐந்து முதல் ஏழு அடி வரை உள்ள விநாயகர் சிலைகள், டிராலியின் மூலம் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏழு அடிக்கு மேல் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளுமே ராட்சச கிரேன் மூலம் நேரடியாக கடற்கரையில் கரைக்கப்பட உள்ளன.

சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தொடர்ந்து கரைக்கப்பட உள்ளதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க மூன்று உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பட்டினம்பாக்கம் கடற்கரை முழுவதும் 16 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு, அந்த கேமராக்களின் காட்சிகளை பார்வையிட எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது.

காலை முதலே பொதுமக்கள் அதிகமாக கடற்கரை பகுதியில் குவிவார்கள் என்பதால் நாள் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர், உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகளை கரைக்கும் போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like