விநாயகரை சதுர்த்தி ஸ்பெஷல்..! சகல பாக்கியங்களையும் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்..!

வினைகளை தீர்க்கும் முதற்கடவுள் விநாயகர்.‘வி” என்றால் ‘இதற்கு மேல் இல்லை” எனப் பொருள். ‘நாயகர்” என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் எவரும் இல்லை என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள்.
விநாயகரின் ஓம்கார வடிவம் சொல்லும் தத்துவம்
மற்ற இறை உருவங்களைப்போல் அல்லாமல், விநாயகருக்கு யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. இதன் பின்னணியில் உள்ள தத்துவமாவது, நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.இது இந்த உலகில் தோன்றிய ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவரின் பெரும் பானை வயிற்றில், பூதர்களை உள்ளடக்கியுள்ளதால்,அவரே அனைத்தும் என்பது உணர்த்தப்படுகிறது.
விநாயக சதுர்த்தி அன்று, அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்தல் வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டி, பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வைத்து, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, அப்பம்,சுண்டல், வடை, அவல், பொரி என பல வகையான நிவேதன வகைகளையும் படைக்கிறோம். அதனை ஏற்றுக் கொண்டு, அறிவும், தெளிந்த ஞானமும், எண்ணிய செயல்கள் தடைவரா வண்ணம் காத்து அருள்வான் கணபதி.
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.விநாயகர் சதுர்த்தியை மிகவும் பய பக்தியுடனும், சிரத்தையுடனும் கடைபிடிப்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும்,தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகலபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
வினைத் தீர்க்கும் விநாயகா போற்றி !