1. Home
  2. தமிழ்நாடு

தனியார் மதுபான ‘கிளப்’பை சூறையாடிய கிராம மக்கள் !

தனியார் மதுபான ‘கிளப்’பை சூறையாடிய கிராம மக்கள் !


பெண்கள், மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த தனியார் மதுபான ‘கிளப்’பை கிராம மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணபூரணியாபுரம் கிராமத்தில் தனியார் மதுபான ‘கிளப்’ ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த மதுபான கிளப்பால் அப்பகுதி பெண்கள், மாணவிகள் பெரிதும் இடையூறுகளை சந்தித்து வந்தனர். குறிப்பாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அந்த கிளப் உள்ளதாகவும், அதனை மூட வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 10 நாட்களாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கடையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்தனர்.

தனியார் மதுபான ‘கிளப்’பை சூறையாடிய கிராம மக்கள் !

அதன் பிறகும் அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவில் மதுபான ‘கிளப்’க்குள் புகுந்து மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். அங்குள்ள நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அதிகாரிகள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அத்துடன் அந்த கிளப்பை உடனடியாக மூட வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மண்எண்ணெய் கேன் தீப்பெட்டியுடன் நின்று கொண்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போராட்டம் குறித்து ஆட்சியருக்கு அதிகாரிகள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான கிளப்புக்கு சீல் வைத்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like