தடையை மீறி கிராமசபை கூட்டம்.. மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு !

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டங்கள் கொரோனா தொற்று காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தன. பாலம் திறப்பு, அதிமுக செயற்குழு கூட்டம் என அவ்விடங்களில் பரவாத தொற்று கிராம சபை கூட்டங்களில் பரவுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த புதுசத்திரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் சமூகவிலகலை கடைபிடித்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் கூடியதாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் அல்போன்சா, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் கொரோனா தடை உத்தரவை மீறி கொரட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்ட 200 பேர் மீது புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தடை உத்தரவை மீறுதல், அரசு உத்தரவை மீறுதல், கொரோனா பேரிடர் சட்டத்தை மீறுதல் (143 பிரிவு, 188 பிரிவு, 15 டி.எம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 200 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற கிராமசபை பெரும்பாலான கூட்டங்களில், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
newstm.in