1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் காலாமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 

இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

இண்டியா கூட்டணி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், இடதுசாரி கட்சித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்தனர். 

அதே போல் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தே.ஜ. கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். 

இதனிடையே தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் இறுதி கட்ட பிரசாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வீடியோவை வெளியிட்டு தொண்டர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். 

இடைதேர்தல் வாக்குபதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று 8-ம் தேதி பிரச்சாரம் ஓய்கிறது. முதல்வருக்கு பதிலாக தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடைசி 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக இண்டியா கூட்டணி, தே.ஜ. கூட்டணி வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று 8-ம் தேதி மாலை 5 மணியுடன் இந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் அன்று மாலையே வெளியூரில் இருந்து வந்து தங்கி உள்ள அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் மாவட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 10-ம் தேதி வாக்குப்பதிவும் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.இத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இத்தொகுதியில் 1,15,749 ஆண் வாக்காளர்களும், 1,18,393 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 31 பேரும் ஆக மொத்தம் 2,34,173 பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பூத் சிலிப்கள் வாகனம் மூலம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த பூத் சிலிப்புகளை தாலுகா அலுவலக ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து வாக்காளர் பட்டியலின்படி சரிபார்த்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகள் முடிந்ததும் அந்த பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அவை ஓரிரு நாளில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Trending News

Latest News

You May Like