1. Home
  2. தமிழ்நாடு

ஸ்லீப் மோடில் விக்ரம் லேண்டர் : இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்..!

1

இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "விக்ரம் லேண்டர் நேற்று காலை 08:00 மணி அளவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விக்ரம் லேண்டர் உயர்த்தப்பட்டு வேறு இடத்தில் இதமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, புதிய இடத்தில் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகியவவை சோதிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவு பூமியில் பெறப்பட்டது. பேலோடுகள் இப்போது அணைக்கப்பட்டுள்ளன. லேண்டர் ரிசீவர்கள் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி தீர்ந்து பேட்டரி தீர்ந்தவுடன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் அருகில் ஸ்லீப் மோடில் இருக்கும். வரும் 22ம் தேதி இருவரும் விழித்தெழுவார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் தற்போது இரவு தொடங்குவதால், அங்கு குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டர் நேற்று காலை ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. நிலவில் பகல் பொழுது தொடங்கியதும் மீண்டும் அவற்றை இயக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, விக்ரம் லேண்டர் தரையில் இருந்து மேலே எழும்புகிறதா, அவ்வாறு எழும்பிய பிறகு அதை வேறு இடத்தில் பத்திரமாக தரையிறக்க முடிகிறதா என்பதை இஸ்ரோ நேற்று காலை சோதித்துப் பார்த்தது. விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடில் வைப்பதற்கு முன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கங்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில், விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி சுமார் 40 செமீ உயர்ந்து, 30 - 40 செமீ தொலைவில் வேறொரு இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2ம் தேதி ரோவரின் பணி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அது ஸ்லீப் மோடுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like