விஜய்யின் பேச்சு பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்: அண்ணாமலை..!
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராகதான் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் அதற்கான புள்ளி விவரங்களை வைத்து பேசினால் நன்றாக இருக்கும்.திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தால் சந்தோஷம்; பாஜக மட்டும் தனித்திருக்கும். திமுக சார்ந்த கொள்கையுடன் விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும். நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல தரவுகளை வைத்துக்கொண்டு விஜய் பேசினால் நல்லது.
இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு என எல்லா கட்சிகளும் வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். பாஜக மட்டும் மும்மொழிக் கொள்கை, நீட் ஆதரவு என தெளிவான கொள்கையுடன் பயணிக்க உள்ளது. இருமொழிக் கொள்கையை தாண்டி 3-வது மொழியை மக்கள் விரும்புகின்றனர்; கேட்கின்றனர். இந்தி மொழி கட்டாயம் என்பது கல்விக்கொள்கை; அதை திமுக அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் அதிக உருது பள்ளிகளை திறக்க வேண்டும் என மாநில அரசின் கல்விக்கொள்கை கூறுகிறது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக ஏன், உருது திணிப்பை ஆதரிக்கிறது. மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும் எனக்கூறுவது குலக்கல்வி இல்லையா?.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'ஏ' டீம் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 'பி' டீம் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறார்கள், பிரசாரத்தின் வாயிலாக அதனை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்கள். அண்ணாமலை வெளியே போய்விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என எண்ணுவது பகல்கனவு. அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது வந்து பாஜகவை வளர்ப்பார்கள். ஜெயக்குமாரும், முனுசாமியும் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதால் அதிமுக அழிந்துகொண்டுதான் இருக்கும்.
இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும்; இடைத்தேர்தல் என்றாலே எப்போதும் ஆளும் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து விக்கிரவாண்டியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.