திருவள்ளூரில் விஜய் கட்சி ஆபீஸை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!

திருவள்ளூர் நகரப் பகுதியில் கடந்த சில காலமாகவே டிராபிக் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சிக்கலைச் சரி செய்வதற்காகச் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாகவே நடந்து வருகிறது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி வாகனங்களுடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இன்றைய தினம் மட்டும் 17க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டன.
அதன்படி தவெக திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட மாவட்ட அலுவலகம் இடிக்கப்பட்டது. திருவள்ளூர் பத்தியால்பேட்டை என்ற இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததால் கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறை இடித்து அகற்றியது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைமை அலுவலகம் இருந்த நிலையி், அதை தான் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இந்த தவெக அலுவலகம் ஆக்கிரமிப்பு என்று முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்தே அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. கட்டிடம் அகற்றப்பட்ட போது அங்கு தவெகவினர் கூடியதால் கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவை பொறுத்தவரைச் சமீபத்தில் தான் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக தவெக பொது குழு கூட்டத்தை நடத்த அக்கட்சித் தலைமை திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இது நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், சமீபத்தில் தான் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.