1. Home
  2. தமிழ்நாடு

விஜய் கட்சி புது யோசனை : இனி திருமணத்தில் மீதமாகும் உணவுகள் ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு..!

1

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு பொதுநலப் பணிகளை மேற்கொண்டுவந்த விஜய், நேரடியாக அரசியலில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தேவையான பலவற்றை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றி கழகம் மூலமாக 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உலக பட்டினி தினத்தையொட்டி, 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வாயிலாக, அன்னதானம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

எங்கள் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி, அன்னதானம் வழங்கினோம். இன்று ஒருநாள் மட்டும் உணவு கொடுத்தால் போதாதது. விஜய் அறிவுறுத்தல்படி, இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்படும். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுவர்.

திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, 1,000 முதல் 1,500 பேர் வரைக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில், 700 பேர் மட்டுமே சாப்பிடுகின்றனர்; உணவு மீதமாகிறது. பாத்திரங்களை கழுவ வேண்டும் என்று கூறி இரவு 11:00 மணிக்கு குப்பையில் கொட்டுகின்றனர்.

அதுபோன்று மீதமாகும் உணவுகளை, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்று, 'பார்சல்' செய்து எடுத்து சென்று ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு வழங்குவர். இதற்காக, திருமண மண்டப மேலாளர்களை தொடர்புகொண்டு, தங்களது மொபைல் போன் எண்களை வழங்கவுள்ளனர். திருமண மண்டப மேலாளர்கள் அழைத்தால், விரைந்து சென்று உணவுகளை சேகரித்து எடுத்து செல்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like